கோவை நகை கடை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக பெண் ஊழியர் மற்றும் அவரின் காதலன் ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில் கடந்த ஞாயிற்றுகிழமை 800 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து விசாரிக்க 4 தனிப்படைகளை அமைத்து கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரன் உத்தரவிட்டார். இதனையடுத்து களத்தில் குதித்த அதிகாரிகள், நகை கடை ஊழியர்களிடமும் விசாரித்தனர். இந்தநிலையில் பெண் ஊழியர் ரேணுகா தேவியிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின், முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், ரேணுகா தேவியின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது தனது காதலன் சுரேஷுடன் இணைந்து கொள்ளையை அரங்கேற்றியதை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனையடுத்து ரேணுகா தேவி மற்றும் காதலன் சுரேஷ் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், நகைகளை மறைத்து வைத்திருக்கும் இடம் குறித்து விசாரித்து வருகின்றனர். கொள்ளை நடந்து 72 மணிநேரத்திற்குள்ளாக குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Discussion about this post