நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகைக் கடை உரிமையாளர்களை ஏமாற்றி 4 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்செங்கோடு கீழரத வீதியில் இயங்கி வரும் தனியார் நகைக் கடையில் பாலமுருகன் என்பவர் நகை செய்து தருவதாக கூறி 800 கிராம் மதிப்புள்ள தங்கத்தை பெற்றுச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நகை செய்து தராமலும், தங்கத்தை திருப்பி தராமலும் இழுத்தடித்ததாக தெரிகிறது. கடை உரிமையாளர் தங்கத்தை திருப்பி கேட்ட போது பாலமுருகன் கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து தீவிர தேடுதலில் ஈடுபட்ட காவல்துறையினர் கூட்டப்பள்ளி பேருந்து நிலையம் அருகே பாலமுருகனைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஈரோடு மாவட்டத்தில் 18க்கும் மேற்பட்ட நகைக் கடைகளில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், தங்கத்தை அடகு கடையில் வைத்த பாலமுருகனின் உறவினர் அருண்குமார் என்பவரையும் கைது செய்தனர்.
Discussion about this post