காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் ஓய்வூதியம் வாங்கித்தருவதாகக் கூறி மூதாட்டியிடம் இருந்து நகைகளைப் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மருதாயி என்ற மூதாட்டியிடம் முதியோர் ஓய்வூதியம் வாங்கித்தருவதாகக் கூறிய மர்மநபர் ஒருவர், அது தொடர்பான அதிகாரிகளை சந்திப்பதற்கு அவரை அழைத்துள்ளார். அப்போது நகைகள் அணிந்திருந்தால் அதிகாரிகள் ஓய்வூதியம் வழங்கமாட்டார்கள் என்று கூறி, மூதாட்டியிடம் இருந்த 2 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு அந்த நபர் ஓட்டம் பிடித்தார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மூதாட்டி, காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அபோது பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த அமானுல்லா என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் தான் மூதாட்டியிடமிருந்து நகைகளைப் பறித்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அமானுல்லாவை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
Discussion about this post