சூரிய ஒளி கூட புக முடியாத ஆழ்கடலானது எண்ணற்ற விநோத உயிரினங்களின் வாழ்விடமாக திகழ்கிறது. நவீன விஞ்ஞானத்தினால் கூட ஊருடுவ இயலாத ஆழ்கடலில் வாழும் ஜெல்லி மீன்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்…
நிலத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழ்வதற்கு, பொதுவான ஒரு தகவமைப்பை பெற்றுள்ளன. அதாவது சுவாசிப்பதற்கான நுரையீரல், ரத்தம், செரிமான மண்டலம், இதயம் போன்ற உறுப்புகள் நிலத்தில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. நீரில் வாழும் உயிரினங்கள் இதற்கு சற்று மாறானவை. மீன்கள் தங்கள் செவுள்கள் மூலம் நீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொள்கின்றன. இதனால் இவற்றின் சுவாச மண்டலம் நிலத்தில் வாழும் உயிரினங்களின் சுவாச மண்டலத்திலிருந்து சற்று மாறுபட்டு உள்ளது. ஆக்சிஜனை செவுள்கள் மூலம் சுவாசிக்க முடியாத சில ராட்சச திமிங்கலங்கள், அடிக்கடி கடலின் மேற்பரப்பிற்கு வந்து காற்றை சுவாசிப்பதை நாம் பார்த்திருப்போம்.
இதற்கு அடுத்தபடியாக, ஆழ்கடல் உயிரினங்கள் மிகவும் வித்தியாசமான உடல் அமைப்பை கொண்டுள்ளன. ஆழ்கடலில் சூரிய ஒளி கூட புக முடியாத அடர்ந்த இருட்டு, மிகமிக குறைந்த ஆக்சிஜன் உள்ளிட்ட சூழலிலும் உயிரினங்கள் வசிக்கின்றன. இத்தகைய ஆழ்கடல் உயிரினங்களில் ஜெல்லி மீன்கள் குறிப்பிடத்தக்கவை. சுவாச மண்டலம், இதயம், ரத்தம், எலும்புகள் இவற்றில் எதுவும் ஜெல்லி மீன்களுக்கு இல்லை. ஜெல்லி மீன்களின் உடலில், தலைப்பகுதி மற்றும் தலையுடன் இணைந்த நீட்சிகள் மட்டுமே காணப்படுகிறது. அதிகபட்சமாக LION MANE JELLY வகை ஜெல்லி மீன்கள், 4 அடி சுற்றளவுடன் 100 அடி வரை நீளமுடைய நீட்சிகளை கொண்டவை. இத்தகைய நீட்சிகளால் இவை இரைகளை உண்கின்றன. ஆஸ்திரேலியாவின் பாக்ஸ் வகை ஜெல்லி மீன்கள் உலகில் மிகவும் ஆபத்தான ஜெல்லி மீன்களாக கருதப்படுகின்றன. 10 அடி நீளமுள்ள இத்தகைய ஜெல்லி மீன்கள் மனிதர்களை தாக்கினால், இதய பாதிப்பு, பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படும் என்றும் சில நேரங்களில் உயிரிழப்புகள் நேர கூட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் நுண்ணறிவுத்திறன் கொண்ட ஜெல்லிமீன்கள், நீட்சிகள் மூலம் வாசனையையும் அறிந்து கொள்கின்றன. இதுவரை ஆழ்கடலில் மட்டுமே காணப்பட்ட இத்தகைய ஜெல்லி மீன்கள் தற்போது கடலின் மேற்பரப்பிலும் தென்படத் துவங்கியுள்ளன. பருவநிலை மாற்றத்தினால் ஜெல்லி மீன்கள் கடலின் மேற்பரப்பில் தென்படத் துவங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில், LION MANE JELLY மீன்கள் உலா வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகுந்த ஆபத்தானதாக கருதப்படும் இத்தகைய ஜெல்லி மீன்களின் நீட்சிகளை தொட்டால் கூட, ஆபத்து ஏற்படும். இதனால் வடகிழக்கு கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மூளை இல்லாமல் உடலில் 95 சதவீதம் நீர் மட்டுமே கொண்ட ஜெல்லி மீன்கள் இயக்கமும், நுண்ணறிவுத் திறனும் அறிவியல் உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Discussion about this post