முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி எடுத்த எபிஸ்டல் ஆவணப் படத்தில் ஜெயலலிதா நடிக்க ஒய்.ஜி.பார்த்தசாரதி, சோ சிபாரிசு செய்தார். 13 வயதில் நடிகையாக அறிமுகமானார். 1961ல் அப்படம் வெளியானது. அதே ஆண்டு “சிறிசைல மகாத்மி ” என்ற கன்னட படத்தில் குழந்தை நட்சித்திரமாக அறிமுகமானார்.
1964ஆம் ஆண்டு பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வந்த “சின்னட கோம்பே” என்ற கன்னடப் படத்தில் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமானார். படிப்பை தொடர்ந்து வந்த ஜெயலலிதா, இப்படத்தை பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் நடித்து கொடுத்தார். இதில் ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவும் நடித்துள்ளார். 1965ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் “வெண்ணிற ஆடை” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஜெயலலிதா, சுமார் 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்தார். 1965ஆம் ஆண்டு இதயக்கனி எம்.ஜி.ஆரின் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் என்.டி.ராமராவ், ரவிச்சந்திரன், சிவகுமார் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார். திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த ஜெயலலிதாவின் படங்கள் நன்றாக ஓடியது.
நடிப்பு மட்டுமில்லாமல் இனிமையான குரலில் சினிமாவில் பாடி அசத்தினார். அடிமைப் பெண் என்ற படத்தில் “அம்மா என்றால் அன்பு” என்ற பாடலை எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை பாட வைத்தார். மொத்தம் 14 திரைப்படங்களில் பாடியுள்ளார். 1972ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஜோடி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த 28 படங்களும் வசூல் சாதனை செய்தது. ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், கன்னித்தாய், சந்திரோதயம், தனிப் பிறவி, காவல்காரன், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், ராமன் தேடிய சீதை என மொத்தம் இணைந்து நடித்த 28 படங்களும் 100 நாட்கள் மேல் ஓடியது. இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம் “பட்டிக்காட்டு பொன்னையா”.
தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கிய ஜெயலலிதா, திரை வாழ்க்கைக்கு முழுக்கு போட்டார். 1980 ஆம் ஆண்டு “நதியை தேடி வந்த கடல்” என்ற படம் தான் அவர் கடைசியாக நடித்த படம். ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு, மது ஒழிப்பு விழிப்புணர்வு பற்றி உருவான “நீங்க நல்லா இருக்கணும்” என்ற படத்தில் நடித்தார். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இதில் முதல்வராகவே வேடம் ஏற்று நடித்து தந்தார். இது சிறந்த சமுதாய கருத்தை வலியுறுத்திய பிரிவில் தேசிய விருது, மற்றும் தமிழக அரசு விருதும் பெற்றது.
சினிமா மீது தீவிர அன்பு காட்டிய ஜெயலலிதா, முதல்வரான பிறகும் திரையுலகிற்கு சேவை அளித்து வந்தார். 2004ஆம் ஆண்டு திருட்டு வி.சி.டி ஒழிப்புக்கு நடவடிக்கை எடுத்தார். 2013ம் ஆண்டு சென்னையில், இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை நடத்தினார்.
Discussion about this post