இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜா, காயம் காரணமாக இந்திய அணியில் நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த இருபது ஓவர் உலக கோப்பைப் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் உடல்தகுதிப் பெற்று மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் டெஸ்ட்போட்டி நாக்பூரில் பிப்ரவரி 9ல் தொடங்குகிறது. அதனையொட்டி இந்திய அணியினர் சுறுசுறுப்பாக தயாராகி வருகின்றனர். தற்போது ஜடேஜாவும் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பது அணிக்கும் அவரது ரசிகர்களுக்கும் கூடுதல் மகிழ்ச்சி.
இந்த விசயம் தொடர்பாக நிரூபர்களுக்கு பேட்டியளித்த ஜடேஜா மிகவும் மனம் உருகி பேசியுள்ளார். நான் எப்போது இந்தியாவின் ஜெர்சியை அணிவேன் என்று எதிர்பார்ப்புடன் இருந்தேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதால் அந்த வாய்ப்பு தற்போது மீண்டும் எனக்கு கிடைத்துள்ளது. உண்மையில் ஐந்து மாதங்கள் ஒருவர் கிரிக்கெட் ஆடவில்லையென்றால் அவரது மனநிலை மிகவும் விரக்தியாக இருக்கும். எனக்கும் அப்படிதான் இருந்தது. அதனாலேயே இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்று திடகாத்திரமாக நம்பி வந்தேன். அது இப்போது சாத்தியம் ஆகியிருக்கிறது. உலககோப்பை நெருங்கும் தருவாயில் என்னுடைய பிசியோக்களும் பயிற்றுநர்களும் இதுதான் சர்ஜரி செயவதற்கு சரியான நேரம் என்றார்கள். அன்று அவர்களின் பேச்சைத் தட்டாமல் கேட்டேன். உலககோப்பையா அல்லது எனது முழங்கால் சர்ஜரியா என்றால் உலககோப்பைக்குத்தான் சென்றிருப்பேன்.
எனது டாக்டரின் வற்புறுத்தலினாலும் சர்ஜரி செய்துகொள்ளத் திட்டமிட்டேன். நான் வீட்டில் இருந்துகொண்டு உலககோப்பையினை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் இப்போது ஆடுகளத்தில் அல்லவா இருக்கவேண்டும் என்று உள்ளம் சொன்னது. தற்போது அனைத்தும் சரியான பின்பு ரஞ்சி டிராபியில் விளையாட ஆயத்தமானேன். சென்னையில் முதல் ரஞ்சி டிராபி போட்டியில் பங்குகொண்டேன். சென்னை வெயில் எனக்கு முதல்நாள் ஒத்துவரவில்லை. பிறகு சில பயிற்சிகளை மேற்கொண்டேன். ரஞ்சிப் போட்டிகளில் சிறப்பாக விளையாட இந்த பயிற்சிகள் மிகவும் கைகொடுத்தன. இவ்வாறு ஜடேஜா தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
Discussion about this post