சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஐடி பூங்கா வளாகத்தின் 8-வது மாடியில் இருந்து பெண் ஐ.டி ஊழியர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பிட் பூங்கா சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் திருச்சியை சேர்ந்த பெண் ஊழியர் டேனிடா ஜூலியஸ். இவருக்கு வயது 24. இவர் பணியாற்றும் ஐடி நிறுவன வளாக கட்டிடத்தின் எட்டாவது மாடிக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த தளத்திற்கு கிடு கிடு வென ஏறியிருக்கிறார் டேனிடா ஜூலியஸ். பின்னர் அங்கே இருந்து கீழே குதித்துள்ளார். விழுந்ததில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் டேனிடாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டேனிடா இந்நிறுவனத்தில் நேற்று முன்தினம் தான் பணியில் சேர்ந்திருக்கிறார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு யாரேனும் இந்த தற்கொலைக்கு பின்பாக உள்ளனரா? அல்லது டேனிடாவை கொலை செய்து தள்ளிவிட்டனரா? என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இளைஞர்கள் மத்தியில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் வருவதே தவறு என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். எவ்வளவு பிரச்னை வந்தாலும் அதை எதிர்க்கொள்ளும் மனோதைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டுமே தவிர உயிரை மாய்த்து கொள்ளும் எண்ணம் தோன்றவே கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர்.
Discussion about this post