திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீடு உள்ளிட்ட, 28 இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் இருக்கும் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதே போல், ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் செயல்பட்டு வரும் ஐ-பேக் நிறுவனத்திலும், சபரீசன் நண்பர் ஜீ ஸ்கொயர் பாலா வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதேபோல், அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகன் வீட்டிலும், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் கார்த்தி மோகன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரூரில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் தி.மு.க. எம்.பி.யும், கலசப்பாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளருமான அண்ணாதுரை வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தென்றல் நகரில் உள்ள அவரின் வீடு மற்றும் தேவனம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பண்ணை வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட சோதனையில் மூன்றரை கோடி ரூபாயை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீடு உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.
Discussion about this post