இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், வான்வெளியை பயன்படுத்தி கொள்ள பஹ்ரைனும் அனுமதி வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய செய்தித் தொகுப்பை காணலாம்…
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த 13-ந்தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் பட்டியலில் தன்னை சேர்த்து கொண்டது. தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் உடனடியாக ரத்து செய்தது. இதன் மூலம் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வர்த்தகம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வரலாற்று நிகழ்வாக இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேரடி விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கியது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபிக்கு புறப்பட்ட முதல் விமானத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகரும் அவரது மருமகனுமான ஜெரட் குஷ்னர் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளும் பயணம் செய்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் கோரிக்கையை ஏற்று இஸ்ரேல் விமானம் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த சவுதி அரேபியா அனுமதி வழங்கியது.
இதேபோல், இஸ்ரேல் விமானங்கள் பஹ்ரைன் நாட்டின் வான்பரப்பை பயன்படுத்த அந்நாடு அனுமதி வழங்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனிடையே, பஹ்ரைன் மன்னர் அல் கலிஃபாவை அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் குஷ்னர் சந்தித்து பேசினார். இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் கோரிக்கையை பஹ்ரைன் ஏற்றது. இதன்மூலம் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா பட்டியலில் பஹ்ரைனும் சேர்ந்துள்ளது. இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் மறைமுக உறவை ஏற்படுத்தி கொண்டுள்ள நிலையில் பாலஸ்தீனம் கைவிடப்படுகிறதோ என்ற அச்சம் இஸ்லாமியர்களிடம் எழுந்துள்ளது.
Discussion about this post