அண்மையில் பா.ரஞ்சித் பேசிய மேடையொன்றில் இந்தியாவின் தேசத்தந்தை அம்பேத்கர் என்றுதான் அழைப்பேன் என்றார். ஒட்டுமொத்த இந்தியதேசமும் தேசத்தந்தை என்று காந்தியை சொல்லிக்கொண்டிருக்க, இவர் மட்டும் தனி பாணி அமைப்பது தேசத்திற்கு எதிரான குற்றமில்லையா?
இல்லை.உண்மையில் அது ஒன்றும் குற்றமல்ல. அம்பேத்கரை அப்படிச் சொல்வது அவரது தனிப்பட்ட விருப்பம்தானே தவிர ஒரு பொதுமேடையில் அப்படிச்சொன்னதால் இப்போது இது விவாதப்பொருளாகியிருக்கிறது.
இந்தியாவின் தேசத்தந்தை என்று பல்லாண்டுகளாக அறியப்பட்டு வரும் மஹாத்மாவிற்கு முதலில் இந்தப் பெயர் எப்படி வந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.
1944 ல் கஸ்தூரிபாய் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேதாஜி அவர்கள் எழுதிய கடிதத்தில்தான் காந்தி முதன்முதலில் தேசத்தந்தை(faher of nation) எனும் பெயரால் அழைக்கப்பட்டார்.
இந்திய அரசையலமைப்பின் ஷரத்து 18(1) ன்படி “தனிமனிதர்களுக்கான எந்த ஒரு சிறப்பு அடைமொழிகளையோ, பட்டங்களையோ இந்திய அரசாங்கம் அனுமதிப்பதில்லை. கல்வி மற்றும் ராணுவத்துறையைத் தவிர.” என்பது தெளிவாகிறது.
1950 ல் அதிகாரப்பூர்வமாகப் பிரகடனம் செய்யப்ப்பட்டது நம் அரசியலமைப்பு. 1944 லேயே இந்தப் பட்டத்தால் அறியப்பட்டார் காந்தி என்பதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.
அப்படியென்றால் அரசியலமைப்பு எற்றுக்கொள்ளாத ஒன்றைத்தான் இன்று எல்லோரும் பெருமளவில் செய்கின்றனரா? என்ற கேள்வி இங்கு தேவைப்படுகிறது. இதற்கான பதில், அரசியலமைப்பு நீங்கள் செல்லப்பெயர்(அ) புனைப்பெயர் வைத்து ஒரு தனிமனிதனை அழைப்பதில் எந்த குறுக்கீடும் செய்வதில்லை என்பதே.
ஒரு தனிப்பட்ட அமைப்பு அந்த அமைப்புக்குள்ளாக ஒரு தனிமனிதர்க்கு பட்டம் வழங்கிக்கொள்ளலாம்.அது அந்த அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது என்றே கொள்ளப்படும். இதை நாடு என்கிற அரசியல் அமைப்போடு ஒப்பிடும் வேளை, அந்த நாடும் இதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தால் மட்டுமே அந்த அவர் அந்த பட்டத்தால் வழங்கப்படலாம். ஆனால் அன்பின் மிகுதியாலும் மரியாதை நிமித்தமாகவும் இதனை காந்தி உள்ளிட்ட சில தலைவர்களின் விடயத்தில் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் பாடத்திட்டம் வரைக்கும் வந்துவிட்ட பிறகாவது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவர் அறிவிக்கப்பட்ட தேசத்தந்தை அல்ல என்பது குறித்த புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.
எனில் எதன் அடிப்படையில் ஒருவரை சிறப்புப் பட்டமிட்டு அழைப்பது? எல்லோரும் அழைக்கிறார்களே? என்றால் அது முழுக்க முழுக்க அன்பிலும் அபிமானத்தின் அடிப்படையிலும் மட்டுமே.
இன்று வரை மஹாத்மா காந்தியும் கூட அப்படித்தான் தேசத்தந்தை என்று அழைக்கப்படுகிறாரே ஒழிய அதிகாரப்பூர்வமாக அரசாங்கம் அறிவிக்கவில்லை. பாடத்திட்டங்களில் காந்தி தேசத்தந்தை எனப்படுவதும் இன்று வரை அறிவிக்கப்படாத நம் அபிமான அனுமானம் தான்.
Discussion about this post