குழந்தைகளின் உணவுப் பொருட்களில் 95% நச்சு தன்மையா ? திடுக்கிடும் தகவல்

அமெரிக்காவில் உள்ள ஹெல்தி பேபிஸ் பிரைட் பியூச்சர் (Healthy Babies Bright Futures) என்ற கூட்டமைப்பு அந்நாட்டில் உள்ள குழந்தைகள் தொடர்பாக பல முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. 

அந்தக் கூட்டமைப்பு சமீபத்தில், அமெரிக்காவில் கிடைக்கும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு நடத்தியது. இதில், அமெரிக்காவின் பல்வேறு கடைகளில் உள்ள குழந்தைகளுக்கான 168 வகையான உணவுப் பொருட்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. இந்த உணவுப் பொருட்கள் அமெரிக்காவின் 14 பெருநகரங்களில் விற்கப்பட்டவை, 61 பெரிய பிராண்டுகளைச் சேர்ந்தவை.

இந்த ஆய்வில்தான் அமெரிக்காவில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் 95% உணவுகள் நச்சுத்தன்மை உள்ளவை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

ஆய்வின் முடிவுகளின்படி, அமெரிக்காவில் விற்கும் குழந்தைகளுக்கான நான்கில் ஒரு உணவில் மனிதர்களால் செரிக்க இயலாத பாதரசம், காரீயம், கேட்மியம், ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் உள்ளன. இவை வளர்ந்த மனிதர்களுக்கே கூட அபாயத்தை ஏற்படுத்தக் கூடியவை என்ற நிலையில், குழந்தைகளின் மன மற்றும் உடல் வளர்ச்சி இவற்றால் கடுமையாக பாதிக்கப்படும். இந்த நச்சினால் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்புகள் 55 சதவிகிதம் உள்ளன!.அத்தோடு புற்றுநோய் போன்ற கொடுமையான நோய்கள் தாக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த ஆய்வில், மிகவும் அதிக அளவிலான நச்சுத் தன்மை உள்ள உணவுப் பொருட்களாக அரிசி உணவுகள், ஆப்பிள் – திராட்சை போன்ற பழங்களின் சாறுகள், உலர்ந்த பாஸ்தா, ஓட்ஸ் உணவுகள், சீஸ், பப்ஸ் – போன்ற அடிக்கடி பயன்படுத்தப்படும் உணவுகள் இடம்பெற்று இருந்தன.

வளர்ந்த நாடான அமெரிக்காவில், குழந்தைகள் உணவின் தரத்தில் காட்டப்பட்டுள்ள அலட்சியமானது அமெரிக்க மக்கள் மட்டுமின்றி, உலகின் அனைத்து மக்களிடமும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது!.

Exit mobile version