இன்னும் 4 ஆண்டுகளில் பெண்களுக்கான ஐபிஎல் தொடர் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
சர்வதேச அணிகளின் வீரர்களை கொண்டு கடந்த 2008ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. எட்டு நகரங்களின் அணிகள் இடம் பெற்ற இந்த தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும்.
ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக ஆண் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில் பெண்கள் அணிகளுக்கும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வந்தது. இதனால் பெண்கள் கிரிக்கெட் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னதாக பல நாட்டு வீராங்கனைகள் பங்குபெற்ற இருபது ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் ‘பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் போட்டியை நடத்தவேண்டுமென்றால் நிறைய வீராங்கனைகள் தேவை என்பதால் பெண்களுக்கான ஐபிஎல் அடுத்த 4 ஆண்டுகளில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் சிறந்த வீராங்கனைகளை உள்ளடக்கிய 7 அணிகள் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தற்போது நம்மிடம் 50 முதல் 60 வீராங்கனைகள் தான் இருக்கிறார்கள். குறைந்தது நம்மிடம் 150 முதல் 160 வீராங்கனைகள் இருந்தால் தான் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
Discussion about this post