ஐபிஎல் தொடரின் 47-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில், கிறிஸ் லின் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரை சதத்தை கடந்தனர். கிறிஸ் லின் 54 ரன்னிலும், சுப்மன் கில் 76 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து அதிரடியாக விளையாடிய ஆந்த்ரே ரசல் 40 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா 233 ரன்களை குவித்தது.
234 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இந்த நிலையில் களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா தனது அதிரடியை வெளிப்படுத்தி 17 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பாண்டியா 34 பந்துகளில் 91 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை தோல்வியை சந்தித்தது. கொல்கத்தா அணியின் சார்பில் ரசல், சுனில் நரைன், ஹேரி குர்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ரசல் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி ஐபிஎல் போட்டிகளில் 100-வது வெற்றியை பதிவு செய்தது.