2017 ஆம் ஆண்டு மே மாதம் 17ல் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக 305 கோடி ரூபாய் முதலீடு பெற்ற வழக்கில் ப.சிதம்பரம் கார்த்தி சிதம்பரம், ஆகியோர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்நிலையில் அதே ஆண்டு ஆகஸ்ட் 10ல் கார்த்தி சிதம்பரம் உள்பட 4 பேருக்கு எதிராக வழங்கப்பட்டு இருந்த லுக் அவுட் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆகஸ்ட் 14ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.
2018, பிப்ரவரி 16ல் கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சொத்துக்களை பராமரித்து வந்த அவரின் ஆடிட்டர் எஸ். பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ல் வெளிநாடு செல்ல முயன்ற கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, டெல்லிக்கு அழைத்துச் சென்றது. 23 நாட்கள் சிறையில் இருந்த கார்த்தி சிதம்பரத்திற்கு 2018, மார்ச் 23ல் ஜாமின் கிடைத்தது. ஜூலை 25ம் தேதி ப.சிதம்பரத்தை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் 11ல் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கியது. 2019ம் ஆண்டு ஜூலை 4ல் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறினார். அவரிடம் சிபிஐ, அமலாக்கத்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர்.
2019 ஆகஸ்ட் 1ம் நாள் அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்ட டெல்லி இல்லத்தை காலி செய்யக் கோரி கார்த்திக் சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 2019 ஆகஸ்ட் 20ல் ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆகஸ்ட் 22ல் ப. சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் வீடு புகுந்து கைது செய்யப்பட்டார்.
15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரம் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ல் திகார் சிறையிலடைக்கப்பட்டார்.