திருப்பதி மலையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுவன், பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். திருப்பதி மலையிலிருந்து கடந்த 28ஆம் தேதி காலை கடத்தி செல்லப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சிறுவன் வீரேஷ், 30 ஆம் தேதி அன்று காலை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாந்தேடு அருகே அந்த மாநில போலீசாரால் மீட்கப்பட்டான்.
சிறுவன் வீரேஷ், அவனை கடத்திச் சென்ற கடத்தல்காரன் விஷ்வம்பர் ஆகியோரை மகாராஷ்டிராவில் இருந்து திருப்பதிக்கு அழைத்து வந்த போலீசார், இன்று காலை சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட சிறுவனை மீட்பதற்கு தேவஸ்தான கண்காணிப்புத் துறையினர் அளித்த அடிப்படை தகவல்கள் முக்கிய ஆதாரமாக விளங்கியதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் அன்பு ராஜன் கூறியுள்ளார்.
திருப்பதி மலையில் நடைபெறும் குழந்தை கடத்தலை தடுக்கும் வகையில், குழந்தைகளுக்கும் சைல்ட் ஐடெட்ட்டிபிக்கேசன் டேக் ( Child Identification Tag ) வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்தில் உள்ள பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு, தனித்துவம் வாய்ந்த ஒரே மாதிரியான டேக், அதாவது அடையாள பட்டை வழங்கப்பட்டு, ஆங்காங்கே காவல் துறையினரின் சோதனையின் போது, டேக் பொருந்தாமல் இருக்கும் பட்சத்தில், அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post