தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 728 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், வரும் ஜூன் மாதம் முதல் பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில், ஆசிரியர்களின் வருகையை முறைப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருகிறார்களா? என்பதை கண்காணிக்க பயோ மெட்ரிக் என்னும் புதிய நடை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிக் (Nic) என்னும் மத்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து, இந்த புதிய தொழில் நுட்பத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 728 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஜூன் 3-ம் தேதி முதல் வருகைப் பதிவேட்டை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுவரை 80 சதவீத பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி பொறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாட்கள் என மொத்தம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயோ மெட்ரிக் பதிவேட்டில் தங்கள் வருகையை பதிவு செய்ய உள்ளனர்.