சென்னை மாநகரின் போக்குவரத்தை மேம்படுத்த பலவித போக்குவரத்து முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாசில்லா மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் இ ஸ்கூட்டி எனப்படும் மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனம், இ ஆட்டோ வாடகைக்கு செயல்பாட்டில் உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…..
தமிழகத்தின் தலைநகரம் சென்னை, இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும கூட. வேலை தேடி சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார்போல் சென்னையின் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தமிழக அரசும் காலத்திற்கு ஏற்றார் போல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய சாலைகள் அமைக்கப்படும் போதே, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அகலமான, விரிவான சாலைகளை அமைப்பது, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாலைகளை தேவையான அளவிற்கு விரிவுபடுத்துவது, முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டுவது, வழித்தடங்களில் மாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காலத்திற்கு ஏற்றார் போல் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
சென்னையில் மாநகரப் பேருந்து, மோனோ ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் என பல வகை போக்குவரத்து முறைகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட மெட்ரோ ரயில் வழித்தடம் தற்போது மிகவும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய போக்குவரத்து முறையாகும்.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதால் பாதுகாப்பான, வசதியான பயணத்தை மேற்கொள்ள முடிவதாகவும் குறிப்பாக பயன நேரம் மிக மிக குறைவாக இருப்பதாகவும்தெரிவிக்கின்றனர் பயணிகள். அதே நேரத்தில் பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அலுவலகம் செல்ல வசதியாக தங்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் வகையில், முழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஸ்கூட்டர்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்த ஸ்கூட்டர்களை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.
முழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய இந்த ஸ்கூட்டரால் கற்று மாசு ஏற்படாது. மெட்ரோ ரயிலில் வந்து இறங்கிய உடன் இந்த ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்று பணி முடித்து திரும்பி வந்து மெட்ரோ ரயில் நிலையத்திலேயே நிறுத்தி விட்டு செல்வது தங்களின் போக்குவரத்து நேரத்தை மிகவும் குறைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர் மெட்ரோ ரயில் பயணிகள்.
VOGO என்ற கைபேசி செயலி மூலம் தங்களின் செல்போன் எண் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை பதிவேற்றுவதன் மூலம் இந்த ஸ்கூட்டர் மற்றும் இ ஆட்டோவை பதிவு செய்து அப்போதே பயணத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்கிறார் மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள VOGO நிறுவன நிர்வாகி சுரேஷ் கண்ணன்.
மின்சார ஸ்கூட்டரை இயக்குவது சுலபம், புகை மாசில்லாத பயணம், பயணிகளின் பாதுகாப்பிற்கு மெட்ரோ ரயில் நிர்வாகமே தலைக்கவசம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய இந்த மின்சார ஸ்கூட்டி சேவை தற்போது ஆலந்தூர் மற்றும் கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் பயன்பாட்டில் உள்ளது. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுகின்றனர் மெட்ரோ ரயில் நிர்வாகிகள்.
Discussion about this post