மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதி ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களிடம் 2ம் கட்டமாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, விழுப்புரம் தொகுதிகளுக்கு இன்று காலை நேர்காணல் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த நேர்காணல் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று பிற்பகல் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
Discussion about this post