சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகை சாய் தன்ஷிகா உள்ளிட்டோர் பங்கேற்று யோகா செய்தனர்.
சென்னை ஓமந்தூரார் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் யோகா செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், செங்கல்பட்டு அருகே சர்வதேச யோகா மையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் ஆரம்பக்கட்டத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
திருச்சியில் மாநகராட்சி சார்பில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். திருச்சி மாநகர், புறநகர் பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகளும், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலை முன்பாக யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ராணுவ வீரர்கள், வெளிநாட்டினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோல், உலகம் முழுவதும் சுமார் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் யோகா நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் வஜ்ராசனம், பத்மாசனம் , புஜங்காசனம் ,யோகமுத்திரா உள்ளிட்ட ஆசனங்களை காவல்துறையினர் மேற்கொண்டனர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆரோக்கிய பாரதி அமைப்பின் சார்பில் சர்வதேச யோகா தினம் வந்தவாசி தனியார் பள்ளியில் நடைபெற்றது. பாதஹஸ்தாசனம், திரிகோண ஆசனம், வஜ்ராசனம், அர்த்த ஹலாசானம் உள்ளிட்ட ஆசனங்களை பொதுமக்கள் செய்தனர்
காரைக்காலில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ ,மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், பல்வேறு யோகாசனங்கள் கற்றுத்தரப்பட்டன.