இடது கையில் எழுதாதே, வலது கையில் எழுது என்று பெற்றோர்கள் குரல் ஒலிக்காத வீடுகள் இருக்கவே இயலாது. இடக் கைப் பழக்கமுள்ள தங்கள் குழந்தைகளை திட்டுவது இன்றளவும் பெற்றோர் மத்தியில் வழக்கத்தில் உள்ளது. இதுபற்றிய விழிப்புணர்வு சரிவர ஏற்படாமல் சிலர் குழந்தைகளை தண்டிக்கவும் செய்கிறார்கள்.
இடது கைப் பழக்கத்தை மாற்ற முயற்சி செய்தால், வேறு சில குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல் ஆய்வுகள். உலக மக்கள் தொகையில், 13 சதவிகித மக்கள் இடது கைப் பழக்கமுடையவர்களாக உள்ளார்கள் என ஐ.நா அறிவித்துள்ளது. இவர்களின் தனித்துவத்தை உணர்த்தும் விதமாக 1976 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சர்வதேச இடதுகைப் பழக்கமுடையோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உண்மையில் இடக்கைப் பழக்கமுடையவர்கள் புத்திசாலிகள். மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல்களை இவர்களால் விரைவில் பரிமாறிக் கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்யும் மல்ட்டி டாஸ்கிங் திறமை, இடக்கை பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகம் உண்டு.
மேலும் இவர்களால் இடது கை,வலது கை ஆகிய இரண்டிலும் இயல்பாக வேலை செய்ய முடியும். ஆனால் அதே சமயம், இடக்கை பழக்கம் உள்ளவர்களின் மூளை விரைவாக செயல்படுவதால், அவர்கள் மிக எளிதாக கோபமடைவார்கள்.
ஐ.கியூ எனப்படும் அறிவுத்திறனில் இடக்கை பழக்கம் உள்ளவர்கள் மேம்பட்டவர்கள். சாதாரண அளவை விட இடக்கை பழக்கம் உள்ளவர்களுக்கு ஐ.கியூ அளவு சற்று அதிகமாவே உள்ளது. சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஐ.கியூ அளவு 160. அவரும் இடக்கை பழக்கம் உள்ளவரே ஆவர். இடக்கை பழக்கம் கொண்டவர்கள் சிறந்த கலைஞர்களாகவும் திகழ்வார்களாம்.
மாவீரன் அலெக்ஸாண்டர், தத்துவமேதை அரிஸ்டாட்டில், பல்முக கலைஞர் சார்லி சாப்ளின், தேசத்தந்தை மகாத்மா காந்தி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் என பல அறிவியல் மற்றும் கலைத்துறையினர் இடதுக்கை பழக்கம் கொண்டவர்களாவர்.
எனவே இடதுக் கை பழக்கம் உள்ள நம் குழந்தைகளை கட்டாயப்படுத்தி பழக்கத்தை மாற்றாமல் அவர்கள் போக்கிலேயே வளர விடுவது, அவர்கள் வாழ்வில் தனித்திறமைகளுடன் முன்னேர வாய்ப்பாக இருக்கும்.
Discussion about this post