இந்த ஆண்டின் சர்வதேச கல்வி தினம் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு அர்பணிப்பு – யுனஸ்கோ அறிவிப்பு!

ஆண்டுதோறும் சர்வதேச கல்வி தினமானது ஜனவரி 24ஆம் தேதி ஐ.நா. சபையின் அறிவுறுத்தலின் படி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த சர்வேதச கல்வி தினத்தினை ஆப்கன் பெண்களுக்கு அர்பணிப்பு செய்வதாக ஐ.நா. சபையின் யுனஸ்கோ அமைப்பானது அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர்கள் தற்போது பெண்களின் உரிமையை அதிக அளவில் பறித்து வருகிறார்கள். அதில் முக்கியமாக கல்வியானது பெண்களிடமிருந்து பறிக்கப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் முழுவதும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் நடந்த பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் முடிவுகள் வெளியாகின. இத்தேர்வினை பல்லாயிரக் கணக்கான பெண்கள் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொருளாதாரம், பொறியியல், இதழியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் படிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வினை எழுதிய பெண்கள் அனைவரும் போராட்டம் நடத்தினார்கள். அப்போராட்டங்கள் தாலிபான்களால் ஒடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் உலக அளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 5வது சர்வதேச கல்வி தினம் வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த தினத்தை ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிப்பதாக ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றம் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நாளை நடைபெறும் கருத்தரங்கில் ஐநா பொது அவையின் தலைவரான ஆன்டனியோ குட்டரெஸ், யுனெஸ்கோ தலைவர் ஆட்ரே அசோலே உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆப்கன் பெண்களுக்கு மீண்டும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version