உலகின் முதல் ‘வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகம்’… இந்தியாவின் விஷ்வ பாரதி பல்கலைக்கழகம் – யுனஸ்கோ அறிவிப்பு

உலகின் முதல் வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகமாக இந்தியாவின் விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தினை ஐ.நாவின் கலாச்சார அமைப்பான யுனஸ்கோ அறிவிக்க உள்ளது. இதன் முழுமையான அறிவிப்பானது இவ்வாண்டு ஏப்ரல் அல்லது மே-யில் வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த பல்கலைக்கழகத்தினை 1921 ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் உருவாக்கினார்.  நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் மற்றும் முதல் இந்தியக் கவிஞர் இவரே. 

1921ல் இந்த பல்கலைக்கழகத்தினை உருவாக்கினாலும் 1922ஆம் ஆண்டில்தான் முறையாக பதிவு செய்தார். அப்போது விஷ்வ பாரதி சொசைட்டி என்றப் பெயரில் இக்கல்வி கழகத்தினை நடத்தினார். மேலும் இது திறந்த காற்றுவெளி பல்கலைக்கழகமாக இயங்கிவந்தது. கலை, இலக்கியம், ஓவியம், இசை, மொழி போன்ற பாடப்பிரிவுகள் அக்காலத்தில் போதிக்கப்பட்டன. சீன-ஆசியன் பாடங்களும் கற்பிக்கப்பட்டன. மேலும் இக்கழகம் இந்தியாவின் பண்பாட்டினைப் பிரதிபலிக்கும் விதமாக இயங்கி வந்தது.

1951 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தின் பல்கலைக்கழக சட்டத்தின்படி இது மத்தியப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் கட்டிட அமைப்பானது பல்வேறு கட்டிடபாணியில் அமைந்திருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகம் மேற்கு வங்கத்திலுள்ள ஷாந்தி நிகேதனில் அமைந்துள்ளது. இதன் பெருமைகளைப் பாராட்டி யுனஸ்கோ உலகின் முதல் வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்த்தினை தர முன்வந்துள்ளது இந்திய நாட்டிற்கே பெருமையாகும்.

Exit mobile version