கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில், சுழற்சி முறையில் 24 மணி நேரமும், 5 காவலர்கள் பணியில் இருக்க வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மண்டல ஐஜி, அனைத்து டிஐஜி மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து நகரங்களிலும் காவலர்கள் 3 ஷிஃப்ட்களில் சுழற்சி அடிப்படையில் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மாநில எல்லைகளில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் காவல் உதவி ஆய்வாளர் அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரி மற்றும் 4 காவலர்கள் பணியில் இருக்க வேண்டும் எனவும், அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சோதனை சாவடிகளில் முகக் கவசங்கள், கிருமி நாசினி ஆகியவை இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப் பட்டவர்களை கண்காணிக்கு குழுவில் காவலர்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் எனவும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post