ஊரடங்கால் கொரோனா பாதிப்பை தற்காலிகமாக தடுக்கலாம் எனவும் ஆனால் தீர்வுக் கிடைக்காது என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, தற்போது மேற்கொள்ளப்படும் கொரோனா சோதனை மிகவும் குறைவானது என்றும், தீவிரமாக சோதனையை அதிகரிக்கவேண்டும் என்பதே மத்திய அரசுக்கு தனது ஒரே ஆலோசனை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவு மூலம் பாதிப்பை தற்காலிகமாக தள்ளிபோட முடியுமே தவிர கொரோனாவை அழிக்கமுடியாது என தெரிவித்துள்ள அவர், மாநில மற்றும் மாவட்ட அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டுமென கூறியுள்ளார். கேரள மாநிலத்தில் இத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை காரணமாக தனது வயநாடு தொகுதியில் கொரோனாவை ஒழிக்க முடிந்ததாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தியா மிகவும் இக்கட்டான தருணத்தில் உள்ளதாகவும், நாட்டு மக்கள் அனைவரும், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post