சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மரவள்ளிக்கிழங்கின் மாவினால் செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு, ஆதரவு பெருகி வருகிறது.
செப்டம்பர 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வைபவம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தற்போது மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை காந்தி நகர் பகுதியில் கடலூரில் இருந்து வந்துள்ள கைவினைக் கலைஞர்கள் குழு ஒன்று எதிர் வரும் விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முற்றிலும் இயற்கையான முறையில் காகித கூல், மரவள்ளி கிழங்கின் மாவு, மற்றும் மூங்கில் குச்சி ஆகியவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டே இந்த விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.
சுமார் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை உள்ள சிலைகள், மிகுந்த கலைநயத்துடன் உருவாக்கப்படுகின்றன. இந்தாண்டின் புதிய வரவாக சிவனின் உருவத்தில் விநாயகர், கையில் தபேலாவுடன் உள்ள விநாயகர், கோலாட்டம் ஆடும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 50க்கும் மேற்பட்ட வகைகளில் சிலைகள் தயாராகி வருகின்றன.
இந்த சிலைகள் உயரத்திற்கு ஏற்றவாறு இரண்டாயிரத்தி ஜநூறு முதல் இருபதாயிரம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் போது எவ்வித மாசுபாடும் இன்றி இருக்க வேண்டும் என்பதால் கெமிக்கல் வர்ணம் பூசுவதற்கு பதில், தண்ணீர் மூலம் வாட்டர் பெயிண்ட் கொண்டு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி முடிந்தாலும் அதற்கு பின்னர் தொடர்ந்து கொலு பொம்மைகள், கிருஷ்ணர் பொம்மைகள் மற்றும் தசராவிற்கு துர்கை அம்மன் பொம்மைகள், ஆகியவற்றை செய்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருவதாக இவர்கள் கூறுகின்றனர்.