ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை பிறப்பு விகிதத்தை குறைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.இதை முற்றிலும் குறைக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன? யாரிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது? சமுதாய அளவில் செய்ய வேண்டியது என்ன? என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
தேசிய ஊட்டச்சத்து வாரம் ஆண்டு தோறும் தமிழகத்தில் செப்டம்பர் மாதம் அனுசரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து என்பது ஒரு திட்டமாக இல்லாமல் மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஊள்ளாட்சி பிரதிநிதிகள், மாநில அரசு துறைகள், சமூக அமைப்புகள், பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்படுகின்றன. குள்ளத்தன்மை, இளம் குழந்தைகளிடையே ரத்த சோகை, எடை குறைபாட்டுடன் குழந்தை பிறப்பு இவையே ஊட்டச்சத்து குறைபாட்டுடன் குழந்தை பிறப்பு என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.
ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு சார்பில், ஆரம்ப சுகாதார மையங்கங்கள் முதல் அங்கன்வாடி மையங்கள் வரை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறுகின்றனர் அங்கன்வாடி மைய ஊழியர்கள்.
அனைவருக்குமான தடுப்பு மருந்து திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் முழு தடுப்பு மருந்துகளை அளிக்க வேண்டும்.9 மாதங்களில் இருந்து உயிர்ச்சத்து ஏ வழங்க வேண்டும். ஊட்டச்சத்து ஆலோசனைகளை பெற்று தொடர்ந்து குழந்தையின் வளர்ச்சியைக் கவனித்து வந்தால் ஊட்டசத்து குறைபாட்டை தவிர்க்கலாம் என்கிறார் அங்கன்வாடி ஊழியர் விஜி.
சமுதாய அளவில் பாதுகாப்பான குடிநீர், குழந்தை மற்றும் விலங்கு மலக்கழிவை பாதுகாப்பான முறையில் அகற்றுதல், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கழிவறையைப் பயன்படுத்துதல், பெண்களுக்கு ஊட்டச்சத்தும், கல்வியும் அளிப்பதோடு சரியான திருமண வயதைப் பேணுதல் வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடப்பாண்டில் 0.17% குழந்தைகளே ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் இது போன்ற சீரிய நடவடிக்கைகளால், விரைவில் இது பூஜ்ஜிய இலக்கை அடையும் என்ற எதிர்பார்ப்பு வெகுதூரத்தில் இல்லை.
Discussion about this post