புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள், திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மிகுந்த சிரமடைந்தனர். புதுச்சேரி, கதிர்காமம் பகுதியில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சுகாதார ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர், லேப் உதவியாளர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களை ஊழியர்கள் நடத்தி வந்த நிலையில், திடீரென பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் திடீர் போராட்டம் காரணமாக சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
Discussion about this post