ஹவாய் தீவில் உள்ள கோனா – என்ற பகுதி சாகசங்களை விரும்பும் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுவது, அதன் நினைவாகவே கோனா என்று பெயரிடப்பட்டிருக்கிறது ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த நவீன எலக்ட்ரிக் கார்.
அழகான வெளிப்புறத் தோற்றம், வலிமையான வடிவமைப்பு, 6 காற்றுப் பைகளுடன் கூடிய பாதுகாப்பு அமைப்பு, 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ – போன்ற நவீனத் தொழில் நுட்ப அம்சங்கள் பலவும் இதில் உள்ளன.
கோனா காரின் என்ஜின் 134 பிஹெச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது என்பதால், 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 9 புள்ளி 7 விநாடிகளில் எட்டிவிடும். கோனா எலெக்ட்ரிக் காரின் உச்சபட்ச திறன் 201.2 பிஹெச்பி ஆகும். எக்கோ, எக்கோ +, கம்ஃபோர்ட், மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய நான்கு மோட்களில் இந்த வண்டியை இயக்க இயலும்.
64 கிலோ வாட் பெர் ஹவர் திறனுடைய லித்தியன் ஐயான் பேட்டரி இதில் உள்ளதால், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர்களை இந்தக் காரில் கடக்கலாம். இதற்காக நிலையாக ஓரிடத்தில் பொருத்தக் கூடியது மற்றும் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லத் தக்கது – என்று 2 விதமான சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன.
இதன் ஆன் – போர்ட் சார்ஜரின் செயல்திறன் 7.2 கிலோ வாட் ஆகும். சிசிஎஸ் டைப் 2 சார்ஜரில் சார்ஜ் செய்தால் முழு பேட்டரியையும் சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 10 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தினால் 57 நிமிடங்களில் 80% வரையில் சார்ஜ் செய்ய முடியும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் குறிப்பிட்ட பங்குகளில் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கோனா காருக்கு 3 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது, எவ்வளவு கிலோ மீட்டர்கள் பயணித்தாலும் இந்த வாரண்டி உண்டு. கோனா காரின் பேட்டரிக்கும் 3 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. ஆனால் 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணித்தால் இந்த வாரண்டி செல்லாது.
வரி நீங்கலாக 25 லட்சத்து 30 ஆயிரம் விலை மதிப்பிடப்பட்டு உள்ளது இந்தக் கார். ஃபேண்டம் ப்ளாக், போலார் ஒயிட், மரினா ப்ளூ, டைப்ஃபூன் சில்வர், போலார் ஒயிட்டுடன் கூடிய ஃபேண்டம் ப்ளாக் ரூஃப் ஆகிய வண்ணங்களில் இது கிடைக்கும்.
இந்திய பட்ஜெட்டில் எலக்ட்ரிக் கார்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கோனா கார் வந்துள்ளதால், வரிச் சலுகைகளுக்காகவும் மக்கள் இதனை விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைக்கு வேறு எந்த மின்சார எஸ்.யூ.வி. கார்களும் இந்திய சந்தையில் இல்லை என்பதால் இதன் செயல்திறனை வேறு கார்களோடு நாம் ஒப்பிட முடியாது. ஆனால் விரைவில் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இன்னும் அதிக செயல்திறனுடன் கூடிய கார்களை அறிமுகப்படுத்தலாம் – என்ற நிலையில் எலக்ட்ரிக் கார்களின் சந்தை அதிக போட்டி உடையதாக மாறும்நாள் தொலைவில் இல்லை.
ஒரு மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் ஏறும் பேட்டரியுடன், ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர்களுக்கு மேல் செல்லும் கார்களே இந்திய சந்தையின் இலக்குகளாக உள்ளன. அதை எட்ட இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.
Discussion about this post