சீனாவுடன் எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால், இந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக்கில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் சீன ராணுவ வீரர்கள் தாக்கியதில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பல்வேறு மாநில மக்களும், சீன உற்பத்தி பொருட்களுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். சீனாவை சேர்ந்த நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களையும் மாநில அரசுகள் ரத்து செய்து வருகின்றன. இந்நிலையில்தான் டிக்-டாக், ஹலோ, யுசி பிரவுசர், கேம் ஸ்கேனர் என 59 சீன செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது மத்திய அரசு. இதுபோன்ற செயலிகள் இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது மத்திய அரசின் விளக்கம். மத்திய அரசு தடை விதித்துள்ள சீனாவின் 59 செயலிகளில், இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுவது டிக் டாக் தான். இந்தியாவில் ஒரு மாதத்துக்கு மட்டும் 10 கோடி பேர் டிக் டாக் செயலியை பயன்படுத்துகின்றனர் என்கிறது புள்ளி விவரம். 2019ம் ஆண்டு டிக் டாக் செயலிக்கு ஒரு வாரம் மத்திய அரசு தடை விதித்த போது, அந்த செயலியை அறிமுகப்படுத்திய BYTE DANCE நிறுவனம், தங்களுக்கு 3 கோடியே 70 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. பிற நாடுகளை காட்டிலும் டிக் டாக்கில் இந்தியர்கள் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. 2019ம் ஆண்டு மட்டும் இந்தியர்கள் 550 கோடி மணி நேரத்தை டிக் டாக்கில் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவை தவிர வெளிநாடுகளில் டிக் டாக் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. ஜனவரி 2018ம் ஆண்டு முதல் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து, 65 கோடி முறை டிக் டாக் ஆப் டவுன் லோடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், இந்தியாவில் செயல்படும் அதன் நிறுவன ஊழியர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்திய அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவதாகவும், பயனாளிகளின் தகவல்களை எந்த வெளிநாடுகளுடனும் பகிரவில்லை என்றும் அரசுக்கு விளக்க உள்ளதாக டிக்டோக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் செயலுக்கு பதிலடியாக, இந்திய தொலைக்காட்சிகள், இணைய தளங்களை சீனா முடக்கியுள்ளது. VPN சர்வருக்கு சீனா தடை விதித்துள்ளதால், கணினி, லேப்டாப், ஐபோன்களில் இந்திய தொலைக்காட்சிகளை பார்க்க முடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இணைய சேவைகளை தவிர்த்து பல்வேறு சேவைகளை பயன்படுத்த VPN பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதையும் முடக்கியுள்ளது சீனா. எல்லை பிரச்னை தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தினாலும், பின்னணியில் இந்தியா – சீனா இடையே நடைபெறும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் மேலும் கசப்புணர்வை ஏற்படுத்தும் என்றே சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post