ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள மலைப்பாம்புகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ரேடியோ டிரான்ஸ்மீட்டரை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை இப்போது காணலாம்
இந்தியாவில் முதல் முறையாக மலைப் பாம்புகளின் இயல்பு குறித்து அறிவதற்காக இந்த முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காராச்சிக்கொரை வன கால்நடை மருத்துவமனையில் மலைப்பாம்புகளுக்கு உள் அறுவை சிகிச்சை மூலம் ரேடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்றது. பாம்புகளுக்கு எவ்வித சேதமும் இல்லாமல் மயக்க மருந்து செலுத்தி மருத்துவர்கள், இந்த சாதனையை படைத்துள்ளனர். 3 பெண் பாம்புகள் 7 ஆண் மலைப்பாம்புகள் என 10 பாம்புகளுக்கு வயிற்றுப்பகுதியில் 18 கிராம் எடையுள்ள ரேடியோ டிரான்ஸ்மீட்டரை மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர்.
பாம்புகளின் உடலில் நிலவும் தட்பவெப்பம், சுற்றுப்புறச் சூழல், இனப்பெருக்கம், உடல் இயல்பு குறித்து இதன் மூலம் அறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சை முடிக்கப்பட்ட 10 பாம்புகளுக்கும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் பவானிசாகர் மற்றும் தெங்குமரஹாடா வனப்பகுதியில் அவை விடப்பட்டன.
இந்த ஆராய்ச்சி இன்னும் இரண்டு ஆண்டுள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்ட மலைப்பாம்புகளில் இருந்து சிக்னல் கிடைத்து வருகிறது. அவற்றின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாம்புகளுக்கு சிறப்பாக சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் அசோகனுக்கு டெல்லியில் உள்ள இந்திய வன விலங்கு ஆராய்ச்சி மையம் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Discussion about this post