வங்க தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில், 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். ரோகித் சர்மா கொடுத்த கேட்சினை வங்கதேச அணி நழுவவிட்டது. இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி, தனது தனித்துவமான ஆட்டத்தின் மூலம் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்ட ரோகித் சர்மா இந்த தொடரில் 4-வது சதத்தினை பதிவு செய்து அசத்தினார். அவர் 92 பந்துகளில் 104 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்த லோகேஷ் ராகுல் 77 ரன்களில் கேட்ச் ஆனார். கேப்டன் விராட் கோலி 26 ரன்கள், ரிஷாப் பண்ட் 48 ரன்கள், டோனி 35 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்களை எடுத்தது. வங்காளதேச அணியின் சார்பில் அதிகபட்சமாக, முஸ்தாபிஜூர் ரகுமான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்
315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்காளதேச அணியின் சார்பில் தமிம் இக்பால் 22 ரன்களும், சவுமியா சர்கார் 33 ரன்களும், முஷிபூர் ரஹிம் 24 ரன்களும் லிட்டன் தாஸ் 22 ரன்களும் எடுத்தனர். ஷாகிப் அல்-ஹசன் 66 ரன்களில் கேட்ச் ஆனார். சபீர் ரஹ்மான் 36 ரன்களில் பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
சீரான இடைபெளியில் விக்கெட்டுகள் விழுந்த நிலையில் முகமது சைபுதீன் 51ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் வங்க தேச அணி 48 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதன்மூலம் வங்காள தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில், 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
Discussion about this post