14 வயதில் பின்னணி பாடகி.., 21 வயதில் தேசிய விருது… 37 வயதில், காலமான கானக்குயில் ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள் இன்று.
என்றென்றும் நினைவுகூரத்தக்க பாடல்களை பரிசளித்து விட்டுச் சென்றுள்ள ஸ்வர்ணலதாவின் இசை பங்களிப்பை இப்போது பார்ப்போம்..
1973 ஏப்ரல் 29 ஆம் தேதி கேரள மாநிலம், பாலக்காட்டில் பிறந்தவர் ஸ்வர்ணலதா.
14 வயதில் எம்.எஸ்.வி. இசையில் நீதிக்கு தண்டனை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’சின்னஞ்சிறு கிளியே கண்ணாம்மா’ என்னும் பாடல் வாயிலாக பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
‘சத்ரியன்’ திரைப்படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச’ என்னும் பாடல் ஸ்வர்ணலதாவை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது.
இளையராஜாவின் இனிமையான இசையில், பாடல் முடிந்து வெகுநேரமானாலும் மனதை பரவசப்படுத்துவார் ஸ்வர்ணலதா.
தொடர்ந்து இளையராஜா இசையில், ‘ராக்கம்மா கைய தட்டு’, ‘குயில் பாட்டு வந்ததென்ன’, ‘போவோமா ஊர்கோலம்’, ‘மாசி மாசம் ஆளான பொண்ணு’ என இனிமையான பாடல்களை கொடுத்து வந்த ஸ்வர்ணலதா ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலில் துள்ளலான வேகத்தில் கவர்ந்தார்.
அந்தியில வானம், மல்லிகை மொட்டு மனச தொட்டு, காலையில் கேட்டது கோயில் மணி, என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன், மலைக்கோயில் வாசலில் என இளையராஜா இசையில் அவர் பாடியது அனைத்துமே டேப் ரெக்கார்டர்களில் ரீவைண்ட் செய்து கேட்கப்பட்ட பாடல்கள்.
வள்ளி படத்தில் இடம்பெற்ற ’என்னுள்ளே என்னுள்ளே’ பாடலை என்னவென்று வர்ணிப்பது? அது ஒரு மந்திர பாடல்.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஸ்வர்ணலதா மேலும் ஜொலித்தார்.
உசிலம்பட்டி பெண்குட்டி, ராக்கோழி ரெண்டும், மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன், முக்கால முக்காபுலா என ரசிக்க வைத்தவர், பாரதிராஜாவின் ‘கருத்தம்மா’ படத்தில் இடம்பெற்ற ‘போறாளே பொன்னுத்தாயி’ பாடலில் வலியையும், வேதனையையும் கொடுத்தார்.
அந்த பாடலில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிக்காக தனது முதல் தேசிய விருதையும் வென்றார் ஸ்வர்ணலதா.
குச்சி குச்சி ராக்கம்மா, மாயா மச்சிந்திரா, அஞ்சாதே ஜீவா, காதலெனும் தேர்வெழுதி, மெல்லிசையே, காதல் யோகி, எவனோ ஒருவன், குளிருது குளிருது என இருவர் கூட்டணியில் ரிபீட் மோட் பாடல்கள் ஏராளம்.
2000ஆண்டின் பிற்பகுதியில் திரைப்படங்களுக்கு பாடுவதை ஸ்வர்ணலதா குறைத்துக்கொண்டார்.
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, அன்புள்ள மன்னவனே, முதலாம் சந்திப்பில், திருமண மலர்கள் தருவாயா, என அனைத்து முன்னணி இசைப்பாளர்களுக்கும் பாடிய ஸ்வர்ணலதா,
தமிழில் கடைசியாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பீமா படத்தில் ரங்கு ரங்கம்மா என்னும் பாடலை பாடினார்.
தனது 23 ஆண்டுக் காலத் திரைப் பயணத்தில் பல அரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் ஸ்வர்ணலதா.
கூச்ச சுபாவம் உடையவரான அவர், தனிமையை அதிகம் விரும்பியதால், உற்ற நண்பர்கள் என்று எவரையும் பெறவில்லை.
இளம் வயதில் பெற்றோரை இழந்ததால், அவரது திருமண வாழ்க்கை குறித்து சிந்திக்கவும் ஆளில்லாமல் போனது.
மேலும் நுரையீரல் பிரச்சனையால் அவதியுற்ற அவர், செப்டம்பர் 10, 2010ஆம் ஆண்டு தனது 37 வயதில் காலமானார்.
இன்னமும் பேருந்துகளில், ரேடியோகளில், மியூசிக் சேனல்களில், நம் மனங்களில் வாழ்ந்துக்கொண்டே தான் இருக்கிறார் ஸ்வர்ணலதா…
Discussion about this post