இந்தியக் கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தப்படும் எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள இந்திய அணியினருக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியக் கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இ-மெயில் ஒன்று வந்தது. அதில், இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த மின்னஞ்சலை ஐசிசிக்கும், இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்தது. இது குறித்துக் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் ஆன்டிகுவாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குத் தகவலைத் தெரிவித்தது. 22ஆம் தேதி நார்த்சவுண்ட்டில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியினர் ஆன்டிகுவா தீவில் உள்ளனர். தாக்குதல் அச்சுறுத்தலையடுத்து இந்திய அணியினர் தங்கும் விடுதிகள், அவர்கள் செல்லும் வாகனம், போட்டி நடைபெற உள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post