இந்திய நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரைத் தொடங்கியது. தற்போது வரை அவர் உரையாற்றி வருகிறார். அதன் சாராம்சம் பின்வருமாறு உள்ளன.
முன்னதாக பேசிய அவர், வரும் காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7% இருக்கும் என்றும், இந்தியா ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் உரையின் தொடக்கத்தில் பேசினார். மேலும் கொரோனா காலகட்டத்தில் 28 மாதங்களுக்கு 80 கோடி எழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் தானியங்கள் வழங்கப்பட்டது. தற்போது இன்னும் ஒரு வருடம் அரிசி மற்றும் தானியம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிட்ட அவர், கடந்த 9 வருடங்களில் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது. பொருளாதார அளவில் உலக நாடுகளின் தரவரிசையில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது என்று அவர் கூறினார். விவசாயக் கடன் ரூபாய் இருபது லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. தோட்டக்கலைத் துறைக்கு ரூ 2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ75,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
157 நர்சிங் கல்லூரி அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், 2047ஆம் ஆண்டிற்குள் இரத்தசோகை நோயானது இந்தியாவிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றார். மருத்துவத்துறையில் ஐ.எம்.சி.ஆர் லேப் அமைக்கப்படும். இந்த லேபில் மருத்துவம் சம்பந்தமான ஆய்வுகள் நடைபெறும். புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்று தெரிவித்தார். இரயில்வே துறை வளர்ச்சிக்காக ரூபாய் 2.8 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறைதான் இரயில்வேக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் போக்குவரத்து உள்கட்டமைப்பிற்காக ஐம்பது கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள், வாட்டர் ஏரோட்ரோம்கள், மேம்பட்ட தரையிறங்கும் மண்டலங்கள் புத்துயிர் பெறும். ஸ்டீல், துறைமுகங்கள், உரம், நிலக்கரி, உணவு தானியம் ஆகிய துறைகளுக்கான 100 முக்கியமான போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்கள் ரூ.75,000 கோடி முதலீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் ரூ.15,000 கோடி தனியாரிடம் இருந்து பெறப்பட்டதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மேலும் இளைஞர்களுக்கு சர்வதேச வேலை வாய்ப்புகளைப் பெற திறன் அளிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் 30 ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் அமைக்கப்படும். பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 4.0 ஐ அரசாங்கம் தொடங்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.