சீனாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பரவி வரும் நிலையில், வுகான் நகரில் மீதமுள்ள இந்தியர்களை மீட்க இந்திய ராணுவ விமானம் நாளை அங்கு செல்கிறது.
கடந்த ஆண்டு சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து ஒரு ராணுவ விமானம் சீனாவில் உள்ள இந்தியர்களில் சிலரை டெல்லிக்கு அழைத்து வந்தது.
அங்கு அவர்கள் சிறப்பு மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தனர். இந்த நிலையில், சீனாவின் வுகான் நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க சி-17 குளோபல் மாஸ்டர் என்ற மிகப்பெரிய ராணுவ விமானத்தை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டது.
இதற்கு சீன அரசு மறுப்பு தெரிவித்ததால், இந்தியர்களை மீட்பதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தியர்களை மீட்க சீன அரசு நேற்று அனுமதி வழங்கிய நிலையில், இந்திய விமானப்படையின் மிகப்பெரிய ராணுவ விமானமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் வுகான் நகருக்கு நாளை செல்கிறது.
இந்த விமானம் வரும் 27-ம் தேதி மீட்கப்படும் இந்தியர்களுடன் இந்தியா திரும்பும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post