12வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா 30ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. கோப்பையை வெல்ல இந்தியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் தொடங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட்டி போட்டியின் வரலாற்றை பார்த்து வருகிறோம்.
3-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1983-ம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் கடந்த முறை இடம் பெற்ற கனடா வெளியேறி ஜிம்பாப்வே இடம் பெற்றது.
60 ஓவர், வெள்ளை நிற சீருடை ஆகியவை மாற்றமின்றி தொடர்ந்தன. லீக் ஆட்ட முறையில் மாற்றம் செய்யப்பட்டது.
இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் ‘ஏ’ பிரிவிலும், மேற்கிந்திய தீவுகள், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் 2 முறை மோதின. லீக் ஆட்டம் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.
இந்த போட்டியில் இந்திய அணி கபில்தேவ் தலைமையில் களம் கண்டது. இந்திய அணியில் ஸ்ரீகாந்த், சுனில் கவாஸ்கர், மொகிந்தர் அமர்நாத், கீர்த்தி ஆசாத், ரோஜர் பின்னி, சையது கிர்மானி, மதன்லால், சந்தீப் பட்டில், பல்விந்தர் சந்து, யஷ்பால் ஷர்மா, ரவிசாஸ்திரி, சுனில் வல்சன், வெங்சர்க்கார் ஆகியோர் இடம் பிடித்து இருந்தனர்.
இந்திய அணி 6 லீக் ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களில் ஒன்றிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களில் ஒன்றிலும் இந்தியா தோல்வி கண்டது.
ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் டாப்-5 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்ட, கபில்தேவ் 138 பந்துகளில் 175 ரன்கள் விளாச 266 ரன்கள் எடுத்தது. கபில்தேவின் அசுரத்தனமான ஆட்டம் அனைவரையும் கவர்ந்ததுடன் அணியின் வெற்றியிலும் முக்கிய பங்கு வகித்தது.
லீக் சுற்றில் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது இந்த போட்டியில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும்.
லீக் சுற்றின் முடிவில் ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தானும், ‘பி’ பிரிவில் மேற்கிந்திய தீவுகள், இந்தியாவும் அரை இறுதிக்குள் நுழைந்தன. அரைஇறுதி ஆட்டங்களில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் சந்தித்தன. இந்த ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள்அணி தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபிக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அதற்கு ஏற்ப முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் 38 ரன்கள் எடுத்தார். வெற்றி இலக்கு ரன் குறைவு என்பதால் மேற்கிந்திய தீவுகள் அணியினர் மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கினார்கள்.
ஆனால் கேப்டன் கபில்தேவ் இன்னிங்ஸ் இடைவெளியின் போது இந்திய வீரர்களுக்கு ஊக்கம் அளித்தார். ‘நாம் வெற்றி பெறக்கூடிய அளவுக்கு ரன் எடுக்கா விட்டாலும், போராட்டம் அளிக்கக்கூடிய அளவுக்கு ரன் எடுத்து இருக்கிறோம். லீக் ஆட்டத்தில் நாம் மேற்கிந்திய தீவுகள் அணியை விழ்த்தி இருக்கிறோம். அந்த நம்பிக்கையுடன் கடைசி வரை துணிச்சலுடன் போராடினால் வெல்லலாம்’ என்று நம்பிக்கை அளித்தார்.
இந்திய வீரர்களின் துணிச்சலான போராட்டத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 52 ஓவர்களில் 140 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக உலக கோப்பையை தன்வசமாக்கியது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹாட்ரிக் கோப்பை கனவை கலைத்ததுடன், அந்த அணியின் ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அணி தரப்பில் மொகிந்தர் அமர்நாத், மதன்லால் தலா 3 விக்கெட்டும், பல்விந்தர் சந்து 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். மொகிந்தர் அமர்நாத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உலக கோப்பை வெற்றியை கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் உற்காசமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்த வெற்றி இந்தியாவில் கிரிக்கெட் ஆட்டம் விசுவரூப வளர்ச்சி காண்பதற்கும், அதிக அளவில் ரசிகர்களை தன்பக்கம் இழுப்பதற்கும் வித்திட்டது என்றால் மிகையாகாது.
Discussion about this post