ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது ஒரு நாள் போட்டி, ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 42 ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய தவான் 96 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து களம் இறங்கிய கோலி 78 ரன்களும், கே.எல். ராகுல் 80 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி, 50 ஓவர்களில், 6 விக்கெட்டை இழந்து 340 ரன்கள் குவித்தது.
341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டகாரர்கள் வார்னர் 15 ரன்னிலும், ஃபிஞ்ச் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து சிறப்பாடி ஆடி ரன்களை குவித்த ஸ்மித் 98 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவரை அடுத்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 304 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-1 என்ற சமநிலையில், உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது.