ஆஸ்திரேலியவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2 வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அலெக்ஸ் கேரி 18 ரன்னிலும், ஆரோன் ஃபின்ச் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவாஜா 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய ஷான் மார்ஷ் சதமடித்தார்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா இந்திய வீரர்களின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டது. அந்த அணியில் அதிக பட்சமாக ஷான் மார்ஷ் 131 குவித்தார். இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
50 ஓவர் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 298 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 299 ரன்கள என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவானும் ரோகித் ஷர்மாவும் சிறப்பான தொடக்கம் தந்தனர். ஷிகர் தவான் 32 ரன்களுக்கும், ரோகித் ஷர்மா 43 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின் களமிறங்கிய ராயுடுவும் 24 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இந்திய கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பின் தோனி 55 ரன்களும் தினேஷ் கார்த்திக் 25 ரன்களும் எடுக்க, 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
Discussion about this post