திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் வென்று, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 4 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, தொடக்கம் முதலே இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. கடைசியில், 31.5 ஓவர்களில், 104 ரன்களை எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக, கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 25 ரன்களும், மார்லன் சாமுவேல்ஸ் 24 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில், ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கெட்டுகளையும், பும்ரா, கலீல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 105 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய இந்திய அணி, 14.5 ஓவர்களில், ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து, வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் ஷர்மா 63 ரன்களுடனும், கேப்டன் விராட் கோலி 33 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 3 க்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி.
Discussion about this post