இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி மூன்று இருபது ஓவர், 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. தர்மசாலாவில் நடந்த முதலாவது இருபது ஓவர் போட்டி மழையால் ரத்தான நிலையில், 2-வது போட்டியில் இந்திய 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தநிலையில், 3-வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணியை பொறுத்த வரை கேப்டன் விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பது அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இதேபோல், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனான குயிண்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா ஆகியோர் நல்ல ஃபார்மில் இருந்தும் அந்த அணியின் பந்துவீச்சு கவலை அளிப்பதாக உள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்தியாவும், சமன் செய்ய தென்னாப்பிரிக்கா அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.