உலககோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது அரையிறுதி போட்டி நாளை மன்செஸ்டர் நகரில் நடக்கிறது. லீக் சுற்றில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக உலககோப்பை தொடரில் அதிக முறை தோல்வியே கண்டுள்ளது. இதுவரை நடந்த உலககோப்பை தொடர்களில் இவ்விரு அணிகளும் 6 முறை மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து அணி 4 முறையும், இந்திய அணி 2 முறையும் வென்றுள்ளது. நடப்பு தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத இருந்த லீக் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
நடப்பு தொடரில் இந்திய அணியின் தொடக்க 3 பேட்ஸ்மேன்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும், 4ஆம் மற்றும் 5ஆம் வரிசை ஆட்டக்காரர்களின் ஆட்டம் சற்று கேள்விகுறியாகவே உள்ளது. அதே போல், பவுலிங்கில் பும்ரா, ஷமி, புவனேஸ்வர் குமார் நம்பிக்கை அளித்தாலும், இறுதிக்கட்டத்தில் பந்துவீசும் போது பும்ரா மட்டுமே சிறப்பாக வீசி வருகிறார். நாளைய அரையிறுதி ஆட்டத்தில் தோனி, பண்ட் பேட்டிங் சிறப்பாக இருக்கும் பட்சத்தில், அது இந்திய அணியின் வெற்றிக்கு சாதகமாக அமையும். நியூசிலாந்து அணியை பொறுத்த வரையில் கணிக்க முடியாத அணியாகவே இருக்கிறது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நடப்பு தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். அதே போல் பவுலிங்கில் ஃபெர்குசன், ஹென்ரி, போல்ட் ஆகியோரின் பந்துவீச்சு அந்த அணிக்கு பெரும் பலமாகவே உள்ளது. ஆயினும் நியூசிலாந்து அணியை இந்திய அணி குறைத்து எடை போடக்கூடாது. போட்டி நடைபெறும் மான்செஸ்டர் மைதானம் பொறுத்தவரை, முதலில் பேட்டிங் செய்யும் அணியே அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால் நாளை நடைபெறும் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இந்திய அணியில் மீண்டும் ஜடேஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. அப்படி வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெறுவது சந்தேகம் தான். குல்தீப் யாதவ்விற்கு பதிலாக ஷமி அணியில் இடம்பெறுவார்.
உத்தேச இந்திய அணி: ரோஹித் ஷர்மா, ராகுல், கோஹ்லி, பண்ட், பாண்டியா, தோனி, ஜடேஜா/தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், ஷமி/குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா.
Discussion about this post