நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆகாய கண் ரேடார் செயற்கைக் கோள், 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு, வானிலை ஆய்வு உள்ளிட்டவற்றுக்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் பிரத்யேக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு பணிகளுக்காக புதிய ரேடார் செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. ரீசாட்-2பிஆர்1 எனப்படும் இந்த ரேடார் இமேஜிங் சாட்டிலைட் செயற்கைகோள் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் வரும் 22-ம் தேதி விண்ணில் செலுப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள், வானில் இருந்தபடி இந்தியாவை கண்காணிக்கும் என்பதால், ஆகாய கண் என்று அழைக்கப்படுகிறது.
விண்ணில் செலுத்தப்படும் இந்த செயற்கைகோள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை பூமியில் ஏதேனும் ஒரு இடத்தில் உள்ள பொருளை துல்லியமாக படம் எடுக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Discussion about this post