இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்திற்கு எதிரான ஹாக்கி போட்டியில், இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

5 ஆட்டங்கள் கொண்ட ஹாக்கி தொடரில் பங்கேற்ப்பதற்காக ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் ஹாக்கி அணி இங்கிலாந்து சென்றுள்ளது. நேற்று, இங்கிலாந்தின் மார்லோவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனையடுத்து, 2 பாதியில் 46வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை எமிலி கோல் அடித்து இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தார். ஆட்டத்தின் கடைசி நிமிடத்திற்கு முன்பு வரை இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில், இந்தியாவின் ஷர்மிளா கடைசி நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார். மேலும் ஆட்டம் முடிய 48 வினாடிகள் இருந்த போது இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அணியின் குர்ஜித் கவுர் கோல் அடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.

Exit mobile version