3-வது டெஸ்ட்: விராட் கோலி, காலியானதால் இந்திய அணி தடுமாற்றம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் தொடர், 3 டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் நடந்த இருபது ஓவர் தொடர் சமனில் முடிந்தது. அடுத்து தொடங்கிய டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியது.

தொடரை முழுமையாக கைப்பற்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், ஆறுதல் வெற்றி பெற பாப் டு பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் தீவிரம் காட்டி வரும் நிலையில், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக களம் இறங்கிய மயங்க் அகர்வால், ரபடா பந்து வீச்சில், 10 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்ததாக களமிறங்கிய புஜராவையும் ரன்கள் எடுக்க விடாமல், ரபடா ஆட்டமிழக்க செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, 12 ரன்களில் அவுட் ஆன நிலையில், இந்திய அணி 39 ரன்களில் தடுமாறியது. பின்னர் களமிறங்கிய ரகானே, ரோகித் சர்மாவுடன் கைக்கோர்த்தார். இருவரும் நிதானமாக தென்ஆப்பிக்கா வேகப்பந்தை எதிர்கொள்ள தொடங்கினர். உணவு இடைவேளையின் போது, இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Exit mobile version