இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், சுற்றுச் சூழலை பாதிக்காத வளர்ச்சியை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரிய வகை உயிரினங்கள் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான 13-ஆவது சர்வதேச மாநாடு குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆசியான் கூட்டமைப்பு மற்றும் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இந்தியா சிறப்பான உறவை வலுப்படுத்தி வருவதாகவும், நாடு கடந்து வரும் பறவைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அடுத்த 3 ஆண்டுகளுக்கு சிறப்பு திட்டங்களை இந்தியா உறுதி செய்து இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்துள்ளதாகவும் அதே நேரத்தில் சுற்றுச்சூழல் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் அரசு உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.