எல்லைப் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள, தீவிரவாதத்தை பயன்படுத்தக் கூடாது என்று, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள, 16வது கூட்டம் சீனாவின் வூசென் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், புல்வாமா தாக்குதல் சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார். பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தாக்குதலில், 40 இந்திய வீரர்கள் பலியானதாக தெரிவித்த அவர், தீவிரவாதத்திற்கு ஒருபோதும் கருணை காட்டக்கூடாது என்று வலியுறுத்தினார். இந்தியா மீது மேலும் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையிலேயே, அவர்களின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சுஷ்மா விளக்கமளித்தார்.பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதல் ராணுவ தாக்குதல் அல்ல என்று குறிப்பிட்ட அவர், ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தாமல் இருக்க எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கை என்று விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து, தீவிரவாதத்திற்கு எதிராக, இந்தியா, சீனா, ரஷ்யா இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எல்லைப் பிரச்சனையை தீர்க்க, தீவிரவாதத்தை பயன்படுத்தக் கூடாது என்றும், தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கை முக்கியமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post