மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற 4-வது போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 162 ரன்களை எடுத்து, மேற்கிந்திய தீவுகளை கதி கலங்க வைத்தார். அவருடன் தொடக்க ஆட்டக்காரராக எதிர்முனையில் களமிறங்கிய ஷிகர் தவான், 38 ரன்னும், கோலி 16 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு, 100 ரன்கள் எடுத்து, அணியின் ரன் வேகத்தை அதிகரித்தார். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது.
378 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள், சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 13.4 ஓவர்களிலேயே அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிக்க 37 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Discussion about this post