கொரோனா வைரஸ் எதிரொலியில், இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள், பல்வேறு முனைப்பானநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. அடுத்த இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் லக்னோவில் 15ம் தேதியும், கொல்கத்தாவில் 18ம் தேதியும் நடைபெறவுள்ளன. இந்தநிலையில் மத்திய விளையாட்டு அமைச்சகம், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பதற்காக இந்தப் போட்டிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தியது. முடியாத பட்சத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடத்தலாம் என தெரிவித்திருந்தது. இதனை ஏற்று, அடுத்த 2 ஒருநாள் போட்டிகளும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதேபோல், வரும் 29ம் தேதி தொடங்கும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும், பார்வையாளர்களுக்கான கதவு அடைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறவுள்ள ஐ.பி.எல். நிர்வாகக் குழு கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வெற்று மைதானத்தில் போட்டியை நடத்தினால் வருவாய் பாதிக்கப்படும் என்பதால், நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டித் தொடர், ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post