ஆசிய கண்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. உலகளவில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் கொரோனா தொற்றால் மிக அதிகமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, ஸ்வீடன், இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் உருக்குலைந்து போயுள்ளன. அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். சீனா, துருக்கி, ஈரான், ரஷ்யா ஆகியவை அதிக பாதிப்புக்களை சந்தித்த நாடுகளாக உள்ளன. இந்த சூழலில், ஆசிய நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. ஆசிய அளவில் கொரோனா பாதிப்பு விகிதம் இந்தியாவில்தான் அதிகம் உள்ளதாக தற்போது புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 26ஆம் தேதி நிலவரப்படி, ஆசியாவில் நான்கு நாடுகளில், சுமார் 25,000 நோய் பாதிப்புகள் மற்றும் 800 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த நான்கு நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. சீனா, துருக்கி, ஈரான் ஆகியவை மற்ற மூன்று நாடுகள் ஆகும்.
மேலும், ஆசிய நாடுகளில் நோய் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் தினமும் அதிகரித்து வரும் நாடுகளில் ஒன்றாகவும், கொரோனா பரிசோதனையில் கடைசி 5 இடங்களில் உள்ள நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சராசரி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், துருக்கி மற்றும் ஈரானில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில் இந்தியாவில் குறைவாக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருவதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தியாவில் இதுவரை சுமார் 28 ஆயிரம் பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 880க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 10 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிறது. பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கவும், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நோய் பாதிப்பு விகிதம் எதிர்வரும் நாட்களில் கணிசமாக குறைக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post