தென் கொரிய நாட்டில் அதிகரித்துவரும் தற்கொலைகள் தற்போது சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறி உள்ளன. சமீபத்தில் பிரபல தென்கொரிய நடிகரும், பாப் பாடகருமான 27 வயது சா இன் ஹா அவருடைய இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தற்கொலை எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக தென் கொரியாவின் பிரபல பாப் பாடகியான கோ ஹரா என்ற 28 வயது இளம் பெண், கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இன்னொரு பிரபல பாப் பாடகியான 25 வயது சுல்லி கடந்த அக்டோபர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2005ஆம் ஆண்டில் இருந்து 10க்கும் மேற்பட்ட தென்கொரிய பிரபலங்கள் தற்கொலை செய்துள்ளனர். மன அழுத்தம், தனிமை, சமூக விமர்சனங்களை எதிர்கொள்ள இயலாத மனநிலை ஆகியவையே இந்தத் தற்கொலைகளுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
தென் கொரிய பாப் பாடகி சுல்லியின் தற்கொலையின் போதே, சமூக வலைத்தளங்களில் தரக் குறைவாக எழுதப்படும் விமர்சனங்களால் பிரபலங்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களைக் காக்க, ‘சுல்லி சட்டம்’ என்ற புதிய சட்டம் இயற்றப்பட்ட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்தக் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ள போதே அடுத்தடுத்து தற்கொலைகள் நடந்து வருகின்றன. இதனால் சமூக வலைத்தளங்களில் பிரபலங்களைப் பின்பற்றுபவர்கள் ‘பிரபலங்களும் மனிதர்களே’ என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
உலகெங்கும் ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் ஏற்படும் போது, நண்பர்கள் அல்லது மனநல ஆலோசகர்களிடம் சிறிது நேரம் பேசினால் கூட தற்கொலை எண்ணம் ஏற்படாது என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். சமூக வலைத்தளங்களில் லட்சக் கணக்கிலும் கோடிக் கணக்கிலும் நண்பர்களைப் பெற்றுள்ள பல பிரபலங்களுக்கு, ஒரு நிமிடம் தனது மனவலியைப் பகிர்ந்து கொள்ள உண்மையான நண்பர்கள் யாரும் இல்லாமல் போய்விட்டது என்பதே தென் கொரிய தற்கொலைகள் உலகுக்குச் சொல்லும் உண்மையாக உள்ளது.
Discussion about this post